நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா | கோப்புப் படம்
தாராபுரம்: முதல்வர் வருகையின்போது போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேரை ஜாமீனில் விடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் விஜய் கடந்த 4-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நிகழ்ந்த சாலை மறியல், காவல் நிலைய முற்றுகை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார், நிர்வாகிகள் இசை மதிவாணன், கந்தசாமி, சூர்யா, சஞ்சய் காந்தி, விக்னேஷ், ஷேக்பரித் உள்ளிட்ட 12 பேரை தாராபுரம் போலீஸார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், 12 பேரும் ஜாமீன் கோரி தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில், கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய நாகர்கோவில் வெங்கடேஷ், சென்னை கோகுல், கோவை மோகன்பிரசாத் ஆகிய 3 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.