தமிழகம்

மேட்டூர் அணை அடிவார வாய்க்கால் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணை அடிவார வாய்க்கால் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள பட்டியந்தல் கிராமத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் 80 பேர் ட்ராவல்ஸ் மற்றும் பேருந்தில் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர். மேட்டூர் காவிரியில் நீராட இன்று காலை காவேரி பாலம் அருகில் பேருந்தில் இருந்த ஐயப்ப பக்தர்கள் இறங்கிய நிலையில், பேருந்தில் 10 பேர் மட்டும் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து ஓட்டுநர் வேலு (38) பேருந்தை பின்னோக்கி இயக்கி சென்ற போது எதிர்பாராத விதமாக பழுதடைந்த தார் சாலையில் சென்றதால் பேருந்து கவிழ்ந்தது. இதனால் சுமார் 40 அடி பள்ளத்தில் தொங்கியபடி பேருந்து இருந்தது. இதுதொடர்பாக தகவலறிந்த மேட்டூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து, பேருந்தில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுப்டனர்.

இதையடுத்து பேருந்தில் இருந்த ஐயப்ப பக்தர்கள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறினார்கள். பேருந்து ஓட்டுநர் வேலு லேசான சிராய்ப்பு காயங்களுடன் தப்பினார். பேருந்தில் அமர்ந்திருந்த மோகன் குமார் (33), தண்டபாணி (49), வேலாயுதம் (35), முருகன் (57), பன்னீர் தாஸ் (40), பாபு (47), பச்சையப்பன் (45), குமரேசன் (22), ரஞ்சித் குமார் (20) ஆகியோருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.

காயமடைந்த 10 பேரும், ஆம்புலன்ஸ் மூலம், மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தை, கிரேன் கொண்டு மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். மேட்டூர் காவிரியில் புனித நீராட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதிக்கு செல்லும் மட்டம் சாலையை போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

நகராட்சிக்கு சொந்தமான இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனை சீரமைக்க கோரி பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மண் சரிந்த சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்

SCROLL FOR NEXT