போக்குவரத்து துறை அமைச்சர் பாரதிபன் ஆய்வு மேற்கொண்டார்

 

படம்: எஸ். குரு பிரசாத் 

தமிழகம்

ஆயுத பூஜை விடுமுறை: சென்னை திரும்புபவர்களுக்கு இன்று, நாளை 9,191 பேருந்துகள் இயக்கம்

எஸ்.விஜயகுமார்

சேலம்: ஆயுத பூஜை தொடர் விடுமுறை முடிவுற்று சென்னை திரும்புபவர்களுக்காக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 9,191 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், தனியார் பேருந்துகளும் வாடகைக்கு எடுத்து இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்ப வசதியாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலத்தில், புதிய பேருந்து நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வசதிகள் குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் பார்த்திபன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்குப் பின்னர் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு வசதியாக, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, வழக்கமாக வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் 4,382 பேருந்துகளுடன், 4,809 சிறப்புப் பேருந்துகளும் சேர்த்து, மொத்தம் 9,191 பேருந்துகள் இன்றும் (20-ம் தேதி) நாளையும் (21-ம் தேதி) இயக்கப்படும். மேலும், தனியார் பேருந்துகளும் வாடகைக்கு எடுத்து இயக்கப்படும். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டும் 519 பேருந்துகள் இயக்கப்படும்.

சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில், தற்போது தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து, சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் நிழற்குடைகள், குடிநீர், கழிவறை, மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சிசிடிவி கேமரா பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரப்போகும் தீபாவளிக்கு, முக்கிய நகரங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT