சென்னை: ‘மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் சிறு, குறு விவசாயி’ விருது, மாவட்ட அளவிலான ‘வெற்றி விவசாயி’ விருது மற்றும் சிறந்த உயிர்ம விவசாயிக்கான ‘நம்மாழ்வார் விருது’ ஆகிய விருதுகள் குறித்த அறிவிப்பு தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் சிறு, குறு விவசாயி விருது:
2026-27 ஆம் ஆண்டில், சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்க, ‘மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள்’ பெயரில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள் உள்ளிட்ட 10 பயிர்களில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு முறையே 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒரு இலட்சம் ரூபாய் என மொத்தம் 30 விவசாயிகளுக்குப் பரிசுகள் வழங்க 50 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்படும்.
மாவட்ட அளவிலான ‘வெற்றி விவசாயி’ விருது:
நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள், பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் "வெற்றி விவசாயி விருது" வழங்கப்படும். முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள், 67 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.
சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது:
உயிர்ம வேளாண்மையினைத் தமிழ்நாட்டில் பரவலாக்குவதன் ஒரு பகுதியாக, 2026 -27 ஆம் ஆண்டில், உயிர்ம வேளாண் முறையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளைச் சிறப்பிக்கும் வகையில், சிறந்த உயிர்ம விவசாயிக்கான ‘நம்மாழ்வார் விருது’ 5 விவசாயிகளுக்கு வழங்கப்படும். பாராட்டுப் பத்திரத்துடன் தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொண்ட இந்த விருதுகளை வழங்க, 11 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு புதிய கட்டிடங்கள்:
வேளாண்மை உழவர் நலத்துறையின் அனைத்துத் திட்டங்களையும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்றுப் பயனடையும் பொருட்டு, திருவண்ணாமலை, காட்பாடி மற்றும் குடியாத்தம் (வேலூர்), முசிறி (திருச்சிராப்பள்ளி), நரிக்குடி (விருதுநகர்). போடிநாயக்கனூர் (தேனி), கயத்தாறு (தூத்துக்குடி) மற்றும் (கோயம்புத்தூர்) தொண்டாமுத்தூர் வட்டாரங்களில், 300 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குடன் கூடிய எட்டுப் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கான கட்டிடங்கள், 27 கோடியே 82 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும்.
‘அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்’ -
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் திட்டப் பலன்களைத் தடையின்றி அடையவும், நீராதாரங்களை உருவாக்கி உற்பத்தியை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திக்கொள்ளவும், ‘அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் செலுத்தவேண்டிய பயனாளி பங்களிப்புத் தொகை, அவர்களுக்கு பெரும் சுமையாக இருப்பதால், அச்சுமையைக் குறைத்து திட்டங்களின் பயனை அவர்கள் அடையும் வண்ணம் இத்திட்டத்தில் 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும்.
இதன்படி, ஒன்றிய, மாநில அரசு பங்களிப்புத் திட்டங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில்கள், நிழல் வலைக்குடில்கள், சூரியக்கூடார உலர்த்திகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் போன்றவற்றிற்கு 70 சதவீதமும், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்திட 80 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ், நீர்ப்பாசன வசதியில்லாத 300 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில், நீர்ப்பாசன ஆதாரமாக ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகள் 100 சதவீத மானியத்தில் மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்புசெட்டுகளுடன் அமைக்கப்படும். 2026-27ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கென 56 கோடியே 72 இலட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
தார்ப்பாய்கள் வழங்குதல்:
மழை போன்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து விளைபொருட்கள் வீணாகாமல் பாதுகாக்கவும், விளைவித்த தானியங்களை உலர்த்துவதற்கும் பெரும்பான்மையான விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, 2026-27 ஆம் ஆண்டில் 10 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் 43 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும்.
வேளாண் கண்காட்சி:
நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், நன்னெறி வேளாண் செயல்பாடுகள், மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு இயந்திரங்கள், வேளாண் இயந்திரங்கள், இயற்கை வேளாண் முறைகள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேளாண் கண்காட்சி (Agri Expo), 3 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்படும்.
இக்கண்காட்சியில் சாகுபடி முறைகள், வேளாண் சார்ந்த பயிர் புதுமையான முயற்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு, உற்பத்தித்திறன், விவசாயிகளின் வருமானம் ஆகியவற்றை அதிகரிக்கத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
திரவ உயிர்உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்துதல்:
தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையின் 22 திரவ உயிர்உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்திட புதிய நொதிகலன், இன்குபேட்டர், நீராவி ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் நிறுவ 3 கோடியே 56 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.