தாம்பரம்: சென்னை விஐடியில் நடைபெற்ற நாவலர் - செழியன் அறக்கட்டளை மற்றும் விஐடி சார்பில் நடைபெற்ற விழாவில், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காருக்கு இரா.செழியன் விருதும், தமிழக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதனுக்கு டாக்டர் நாவலர் விருதை, முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
விஐடி சென்னையில் நாவலர் செழியன் அறக்கட்டளை மற்றும் விஐடி சென்னை இணைந்து டாக்டர் நாவலர் மற்றும் இரா.செழியன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
விஐடி துணை தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். விழாவில், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காருக்கு இரா.செழியன் விருதும், தமிழக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதனுக்கு டாக்டர் நாவலர் விருதையும் வழங்கி பன்வாரிலால் புரோகித் கவுரவித்தார்.
பின்னர், பன்வாரிலால் புரோகித் விழாவில் பேசியதாவது: அங்கீகாரம் என்பது ஒருவரை ஊக்கப்படுத்தி, மேலும் பலரைச் சாதிக்கத் தூண்டும் ஒரு சக்தியாகும். ஏனெனில், ஒரு திறமையோ அல்லது ஒருவரோ கடலின் ஆழத்தில் மறைந்து கிடப்பதை விட, வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும்போதே உலகம் அவர்களை அதிகம் மதிக்கிறது. கல்வியைத் தாண்டி, நமது உடல்நலப் பிரச் சினைகள் குறித்தும் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அனைத்துத் துறைகளிலும் இந்தியா உலகுக்கே தலைமை தாங்க வேண்டும். அதற்காக, நாம் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது, "தனிநபர் வருமானத்தை உயர்த்தக்கூடியதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார ரீதியாக இந்தியாவும், சீனாவும் ஏறக்குறைய சம நிலையில் இருந்தன. ஆனால், இப்போது தனிநபர் வருமானத்தில் சீனா, இந்தியாவை வெகுவாக முந்திவிட்டது. இதை நாம் தீவிரமாகக் கருத்தில் கொண்டு, நமது தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
விழாவில், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பேசும்போது,"சாதி, இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து, அறநெறிகள், உண்மைத் தன்மை, நேர்மை, தேச பக்தி மற்றும் சர்வதேச சகோதரத்துவம் ஆகிய வற்றை வளர்ப்பதன் மூலம் நம் குழந்தைகளை சிறந்த மனிதர்களாக உருவாக்க உதவுவதே கல்வியின் முதன்மை நோக்கமாகும்.
ஆனால், தற்போது குறுகிய சுயநல மனப்பான்மையுடன் தங்கள் தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆன நிலையில் இதுதானா நமக்குக் கிடைத்த நிலை? நாம் அனைவரும் இது குறித்து ஆழமாகச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக முன்னாள் அமைச்சருமான வி.வி.சுவாமி நாதன் பேசும்போது, விருது வழங்கிய அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழக முன்னாள் அமைச்சராகவும் தான் மேற்கொண்ட பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுவதாக தெரிவித்தார்.