தமிழகம்

பெரியபாளையம் அருகே லாரி மீது ஆட்டோ மோதி விபத்து: சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

வெற்றி மயிலோன்

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

சென்னை, கொடுங்கையூர், தியாகராய நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் லோகநாதன் (வயது42) இவரது மனைவி பூங்கொடி (வயது39), மகள் தனலட்சுமி (வயது10), உறவினர் ராதா (வயது65), கோகுல் (வயது10), பிரசாந்த் (வயது15) ஆகியோர் ஆட்டோவில் திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலுக்கு நேற்று இரவு வந்து கொண்டிருந்தனர்.

லோகநாதன் ஆட்டோவை ஓட்டி வந்தார். இவரது மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்டோவில் அமர்ந்து வந்தனர். பெரியபாளையம் அருகே சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் பனப்பாக்கம் கிராமம் பகுதியில்,எம்டிசி நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ வந்தபோது முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத லாரியின் மீது ஆட்டோ மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் காவல் நிலைய போலீஸார் விரைந்தனர். ஆனால் அதற்குள் மூதாட்டி ராதா, சிறுவன் கோகுல், பூங்கொடி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

உயிருக்குப் போராடிய ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் ,மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான மூன்று பேரின் உடலையும் போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர். இந்த விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT