சென்னை: ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களின் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் பெரும் திரள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பேச்சுவார்த்தையின் போது, ஆட்டோ ஓட்டுநர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கெனவே அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும், முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும் என அமைச்சர் பார்த்திபன் உறுதியளித்தார். பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்த நிலையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.