தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்

 
தமிழகம்

சகோதரரை தாக்கிய விவகாரம்: வழக்கை ரத்து செய்யக் கோரிய நிதியமைச்சர் மனு வாபஸ்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சகோதரரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை நிதியமைச்சர் மரியவில்சன் திரும்பப் பெற்றுள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்‌.

புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, “நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது எனக்கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல; நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் மாநிலத்தின் நிதி அமைச்சர்தான். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லவிருப்பதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதி, “அமைச்சர் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது, அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமே!” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல எனக்கூறி, எந்தத் தேதியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கும்படி அவர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்திருந்தார்.

இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மரியவில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும், புதிய குற்றப்பத்திரிகையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும், ஆக.31-ஆம் தேதிக்குப் பிறகு, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதாகவும் உறுதி அளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய நிதியமைச்சர் மரியவில்சனின் மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT