சென்னை: முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் ‘முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி’யாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதை இடதுசாரிகள், காங்கிரஸ், தேமுதிக கட்சிகள் வரவேற்றுள்ளன.
முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நேற்று நியமனம் செய்யப்பட்டார். முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும், இன்று சட்டப்பேரவையில் பேசிய தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா, ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனத்துக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், தவெக அரசு இன்று அந்த உத்தரவை ரத்து செய்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் பணி நியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது. விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும்போது அதை ஏற்றுச் சரிசெய்துகொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும். அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில், ‘ராதன் பண்டிட்டை அரசு பணியில் நியமித்ததை ரத்து செய்த தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துக்கள். ஜோதிடர் ராதன் பண்டிட் என்பவரை அரசு பணியில் நியமித்ததை கண்டித்து, இன்று (13.05.2026) சட்டப்பேரவையில் நான் எடுத்துரைத்த கருத்துக்கு உடனடியாக நியமன ஆணையை ரத்து செய்த தமிழக முதல்வர் விஜய்க்கும், தமிழக அரசின் நடவடிக்கைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். வரும் காலங்களில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக முதல்வர் மற்றும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் அமையும் என்று நம்புகிறேன்.
போகவேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைக்கப்பட வேண்டும். எதிர்க்கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் முதல்வரின் பண்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசின் முதல்வர் ஜோசப் விஜய்க்கு சிறப்பு அரசியல் அலுவலராக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். ஜோதிட சாஸ்திரத்தை தொழிலாக கொண்ட ஒருவரை அரசின் அதிகார மையத்தில் அரசியல் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற பண்புக்கு மாறானது.
அறிவியல் கருத்துக்களையும், கண்ணோட்டத்தையும் வளர்க்க வேண்டும் எனில் அவரது பணி நியமனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இவற்றைக் கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது. விமர்சனங்களுக்கு காது கொடுத்து, உரிய நடவடிக்கை எடுத்துள்ள அரசின் ஜனநாயக பண்புக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டுதல்களை தெரிவிப்பதுடன், இந்த ஆரோக்கியமான அணுகுமுறை தொடர்ந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்