சென்னை: சட்டப்பேரவையை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகர் அறிவித்தார். தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜூன் 19-ம் தேதி தொடங்கியது.
அதன்பின் அன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழுவில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை 23-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஜூன் 19-ம் தேதி கூடிய சட்டப்பேரவையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்க்கும், முதல்வர் விஜய் முன்மொழிந்த அரசின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார்.
இதையடுத்து, சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அமைச்சர் செங்கோட்டையன் கொண்டுவந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
முன்னதாக சட்டப்பேரவை நேற்று தொடங்கியதும் முன்னாள் எம்எல்ஏக்கள் அ.சின்னச்சாமி, வீ.எஸ்.காளிமுத்து ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.