சென்னை: சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம், கடந்த ஜன.20-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் பேரவையைவிட்டு வெளியேறினார். இதையடுத்து ஆளுநர் உரையை அவர் படித்ததாக அவைக்குறிப்பில் பதிவு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் அன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழுவில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஜன.24-ம் தேதி வரை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஜன.21-ம் தேதி மறைந்த மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல், எம்எல்ஏ கு.பொன்னுசாமி மற்றும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய ஆளுமைகளுக்கு இரங்கல் வாசிக்கப்பட்டு அன்றைய நாள் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன.22-ம் தேதி தொடங்கியது. அடுத்த நாள் ஜன. 23-ல் சட்டப்பேரவையில்முதல்வர் முன்மொழிந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த அரசின் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 5 சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் மிகை செலவுக்கான நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவும் நிறைவேற்றப்பட்டது.
நிறைவு நாளான நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். தொடர்ந்து நேற்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 5 சட்ட முன்வடிவுகளுடன் சேர்த்து 10 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அமைச்சர் எவ.வேலு கொண்டுவந்து, குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.