சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
சென்னை: சட்ட விதிகளுக்கு உட்பட்டே அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனிடையே, ஆட்சியை தக்க வைக்க நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக சாரில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தரப்பில் 25 எம். எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதால், அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.
கட்சி தலைமையின் விதிகளை மீறிய 25 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில், சிலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இபிஎஸ் அணியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதனால் சி.வி.சண்முகம் தரப்பு குழுவில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று சி.வி.சண்முகம் தரப்பில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டு மூவரும் தவெகவில் இணைந்தனர். இன்று மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ராஜினாமா கடிதங்களை ஏற்கக் கூடாது என்று சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதனிடையே சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ”சட்ட விதிகளுக்கு உட்பட்டே அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சபாநாயகரின் சட்ட விதிகளின்படியே நடவடிக்கை எடுத்தேன்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வழங்கிய மனு மீது முறையாக நடவடிக்கை எடுக்க சிறிது தாமதம் ஏற்பட்டு்ள்ளதே தவிர மனுவை ஒதுக்கவில்லை. தவெக அரசுக்கு ஆதரவு கூடுகிறதா குறைகிறதா என்பதை கவனிப்பது எனது வேலை அல்ல, எனது வேலை எண்ணிக்கையை சரி பார்ப்பது மட்டுமே.” என்று கூறினார்.