கரூர்: வருமானவரித் துறையினரை தாக்கிய வழக்கில் கரூர் மேயர் கவிதா உள்ளிட்ட திமுகவினர் 140 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ 2011-2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து பணம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர், சமரசம் ஏற்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மறுவிசாரணை நடத்த 2023-ல் உத்தரவிட்டது.
இதையடுத்து, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் 10-க்கும் அதிகமானோர் 2023, மே 26-ம் தேதி வாகனங்களில் வந்தனர். அசோக்குமார் வீடு பூட்டியிருந்ததால், வருமான வரித் துறை அதிகாரிகள் கதவை திறந்து வீட்டு வராண்டா பகுதிக்குச் சென்றனர்.
அப்போது, அங்கு திரண்டிருந்த திமுகவினர், அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, அவர்கள் வந்த காரின் முன்பக்க கண்ணாடி, பக்கவாட்டு கண்ணாடி ஆகியவற்றை உடைத்து அதிகாரிகளையும் தாக்கினர். இதில் காயமடைந்த வருமானவரித் துறை அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர், இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் திமுகவினர் 100-க்கும் அதிகமானோர் மீது கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், ஜூன் 20-ம் தேதி இவ்வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை தேடி கரூர் போலீஸார் சென்னை சென்றனர்.
இதையடுத்து, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, திமுக மாவட்ட துணைச் செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட திமுகவினர் 140 பேருக்கு முன்ஜாமீன் கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுகவினர் 140 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி தங்கவேல் உத்தரவிட்டார்.