தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த இந்திய மகளிர் அணி கிரிக்கெட்டர் கமலினி
சென்னை: ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அந்த அணியில் இடம்பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினியின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும். இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழக அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்.
கமலினியின் இந்த வெற்றி, தமிழக இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.