திருப்பரங்குன்றம்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் ‘மலை மேல் குமாரர்’ திருவிழாவுக்காக மலையில் சமையல் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது.
இதுதொடர்பாக திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பிரபு மற்றும் தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருந்ததாவது: திருப்பரங்குன்றம் மலைகிராம மக்கள் காலங்காலமாக நடத்தி வரும் ‘மலை மேல் குமாரர்' திருவிழாவில் 105 கிலோ அரிசி சமைத்து பக்தர்களுக்கு ‘கதம்ப சாதம்' வழங்கப்படுவது வழக்கம்.
சமையலுக்குத் தேவையான அரிசி, சமையல் பொருட்கள் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் சமையல் வேலை தொடங்கும்போது மலைப்பகுதியில் சமைக்க அனுமதி இல்லை என கூறி ‘கதம்ப சாதம்' சமைக்க அனுமதி மறுக்கப்படுவதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.
கதம்ப சாதம் தயாரிப்பது என்பது காலங்காலமாக நடத்தப்படும் ஒரு சடங்கு. எனவே, மலையின் மேல் சமைக்க அனுமதி மறுத்து மத்திய தொல்லியல் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து பிரசாதம் சமைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று அவசர மனுவாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘‘வழிபாட்டு உரிமைகளில் தலையிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அப்படியிருக்கும்போது மலையில் பிரசாதம் சமைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதில் என்ன பிரச்சினை? ஒவ்வொரு ஆண்டும் மலையில் சமைத்துதான் பிரசாதம் வழங்கப்படுமா?’’ என கேட்டனர். அதற்கு மனுதாரர் தரப்பில், காலங்காலமாக மலையின் மேல் சமையல் செய்தே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மலை உச்சியில் சமையல் செய்வது குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது. அடிவாரத்தில் சமைத்த உணவை மலைக்குக் கொண்டு சென்று பக்தர்களுக்கு வழங்கலாம். தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில், மலை மேல் குமாரர் திருவிழாவில் மலையில் சமையல் செய்யக் கூடாது என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொல்லியல் துறை சார்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று அடிவாரத்தில் சமையல் செய்து மலையில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யும் முந்தைய உத்தரவை திரும்பப் பெறுவதாகவும், மனுக்களை முடித்து வைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.