சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடைக் காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாகவும் முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்குப்பின் முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாவது: சென்னை மாநகராட்சி, அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்பாடுகளை களைந்து, லாரிகளின் மூலமாகவும், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் திங்கள்கிழமைதோறும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் எதிர்வரும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, தூர்வாரும் பணிகள், வெள்ளத்தடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டத்தில், தலைமைச் செயலர் எம்.சாய்குமார், துறை செயலர்கள் ககன்தீப்சிங் பேடி ( ஊரக வளர்ச்சி), தா.கார்த்திகேயன் (நகராட்சி நிர்வாகம்), மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, ஊரக வளர்ச்சி ஆணையர் பி.பொன்னையா, பேரூராட்சிகள் இயக்குநர் பிரதீப் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநர் ஆனந்த்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.