புதுக்கோட்டை: தமிழகத்தில் தவெக குதிரை பேரம் நடத்துவதாக வரும் தகவல்கள் குறித்து மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: இந்தியாவில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் செய்யாத சாதனையை 12 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ளது. இந்தியாவில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைந்துள்ளன. தவெக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. திறனற்ற அரசாக உள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே சிறுபிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள், மின்வெட்டு மற்றும் அரசியல் குழப்பம் போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு குறித்து எந்த இடத்தில் விமர்சனம் செய்ய வேண்டுமோ, அந்த இடத்தில் பாஜக நிர்வாகிகள் விமர்சனம் செய்வார்கள். தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள உறவு போகப்போகத்தான் தெரியும்.
அதிமுக எம்எல்ஏக்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது தொடர்பாக, கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் விளக்கம் அளிப்பார்கள். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் தவெக குதிரை பேரம் நடத்துவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. இவ்வாறு கூறினார்.
அப்போது, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மேற்கு மாவட்டத் தலைவர் என். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.