டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் . உடன் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு. படம்: எல்.சீனிவாசன்
சென்னை: ‘என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளர்ச்சி முடக்கப்படும், குழந்தைகளுக்கான கல்வி திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்’ என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கவந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய நலத்திட்டங்கள் முன்னோடியானது. 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் நிம்மதியாக உணர்கின்றனர். சில திட்டங்கள் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டுள்ளன. தேசிய அளவில் மத்திய அரசால் கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் நெருக்கடி ஏற்படும்போது ஸ்டாலின் மிக வலிமையாக குரல் கொடுத்துள்ளார். நாட்டுக்காக, ஜனநாயகத்துக்காக, மாநில சுயாட்சிக்காக உறுதியாக நின்றவர். இந்த காரணங்களால் அவரை ஆதரிக்கிறேன்.
பாஜகவின் பிரிவினைவாதம், வெறுப்பு அரசியலை தமிழக மக்கள் எதிர்க்கின்றனர். அதனால்தான் பாஜகவால் பல ஆண்டுகளாக தமிழகத்தில் வெல்ல முடியவில்லை. அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. ஆனால் பாஜகவின் பிடியில்தான் அதிமுக உள்ளது. ஒரு இடத்தில் பாஜக வென்றால் கூட, பாஜகவை சேர்ந்தவர்தான் முதல்வராக வருவார். நிதிஷ் குமாரின் நிலைமைதான் இங்கு இருப்பவர்களுக்கும் ஏற்படும்.
டெல்லியில் கடந்த ஆண்டு பாஜக வெற்றி பெற்றது. ஒரு ஆண்டு காலத்திலேயே மக்கள் பாஜக ஆட்சியால் விரக்தி அடைந்துள்ளனர். ஆம் ஆத்மி செயல்படுத்திய கல்வி, வளர்ச்சி திட்டங்களை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டனர். அதேபோல், தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலினின் திட்டங்களையும் ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்கள். 5 ஆண்டுகளின் முன்னேற்றம், நலத்திட்டங்கள், குழந்தைகளுக்கான கல்வி திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.
டபுள் இன்ஜின் அரசு என சொல்கின்றனர். அனைத்து இன்ஜின்களும் தோல்வியுற்றுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்கள் எங்கே வளர்ந்து இருக்கின்றன. சீரழிவுதான் அடைந்துள்ளன. திமுக ஆட்சியில் மக்கள் ஏற்கெனவே நன்றாக இருக்கும்போது மாற்றம் ஏன் வேண்டும்? தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு, அதனால் விஜய் போட்டியிடுகிறார்.
அவர் இந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார். மின்சாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை பொதுமக்களுக்கு வழங்குவதில் என்ன தவறு? எளிய மக்களுக்கு வழங்கப்படுபவை இலவசமல்ல; நலத்திட்டம். அதேநேரம் அம்பானி, அதானிக்கு பாஜக வழங்குவதுதான் இலவசம்.இவ்வாறு அவர் கூறினார்