சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அருண்குமார்
சேலம்: சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் அருண்குமார் அதிமுகவில் இணைந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது, எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து, தவெக சார்பில் அருண்குமார், திமுக வேட்பாளர் காசி மற்றும் சுயேச்சைகள் உள்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளரின் மனுவை அதே தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவை 8 பேர் மட்டுமே முன்மொழிந்திருந்ததால், அவரது மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்து செய்து உத்தரவிட்டார். இது தமிழகம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த பிரேம்குமார் என்பவருக்கு, தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 1,48,933 வாக்குகளைப் பெற்று, 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தவெக ஆதரவுடன் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிட்ட பிரேம்குமார் 50,823 வாக்குகள் பெற்று, 2-வது இடம் பெற்றார். திமுக வேட்பாளர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், தவெகவில் இருந்து விலகிய, அக்கட்சியின் வேட்பாளர் அருண்குமார், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது குறித்து அருண்குமார் கூறுகையில், “தேர்தலின்போதே தவெகவில் இருந்து விலகி விட்டேன். ஏற்கனவே, அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்தேன். தற்போது, அதிமுகவுக்கு திரும்பிவிட்டேன்” என்றார்.