சென்னை: “சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை அராஜகப் போக்குடன் கைது செய்திருக்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக சாடியுள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
"சம வேலைக்கு சம ஊதியம்" என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் ஸ்டாலின் அவர்களே!
ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.