பிரதிநிதித்துவப் படம்

 
தமிழகம்

தேனி வழியே சதுரகிரி செல்லும் பக்தர்கள்: வனத்துறை ஏற்பாடுகள் என்னென்ன?

என்.கணேஷ்ராஜ்

தேனி: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தேனி மாவட்ட வனப்பாதை வழியே செல்ல பக்தர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா இன்று (ஆக.10) தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கோயிலுக்கு தேனி மாவட்டம் உப்புத்துறை கருப்பசாமி கோயில் வழியாகவும் மலைப்பாதை உள்ளது. இதன் வழியே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு விழாவுக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பிரவீன் கவுதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சதுரகிரிக்கு உப்புத்துறை பழைய கருப்பசாமி கோயில் வழியே காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். மற்ற நேரங்களில் கண்டிப்பாக அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை், பிளாஸ்டிக் மற்றும் வனத்தை மாசுபடுத்தும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.

குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே நடந்து செல்ல வேண்டும். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அருகில் உள்ள காவலர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி பெறலாம். மலைப்பாதையில் குறைந்த அளவிலேயே தண்ணீர் வசதி உள்ளதால் தங்களுடன் உரிய அளவுக்கு குடிநீரை கொண்டு செல்ல வேண்டும். டார்ச் லைட் வைத்திருப்பது அவசியம்.” இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT