Arlekar new full-time Governor of T.N
சென்னை: தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக ஆளுநராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பதவி வகித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அவர் மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரிடம் தமிழக ஆளுநருக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாகக் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்த ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநில ஆளுநராக பிரஜ் மோகன் ராம், கர்நாடக மாநில ஆளுநராக டாக்டர் சுதா யாதவ், உத்தராகண்ட் மாநில ஆளுநராக டாக்டர் தால் சிங் பிசென் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக துஷ்யந்த் கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.