சென்னை: பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதிகளில் போட்டியிடும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்,சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவர்களுக்கான தனித்தொகுதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தனித்தொகுதிகளில் இந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதங்களை பின்பற்றும் பட்டியல் இனத்தவர்களை மட்டுமே போட்டியிட அனுமதிக்க வேண்டும். மதம் மாறிய பட்டியல் இனத்தவர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது.
ஏனெனில், இந்திய அரசியல் சாசனம் வகுத்துள்ள பட்டியல் இனத்தவர்களுக்கான வரையறையில் இந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதங்களை பின்பற்றுபவர்களையே குறிப்பிட்டுள்ளது. இதையே உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. தற்போது 44 தனித்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளனர்.
எனவே, வேட்புமனு பரிசீலனையின்போது தனித்தொகுதியில் போட்டியிடுபவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்பதை தீவிரமாக ஆய்வு செய்யவும், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தனித்தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்கவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.