இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காஞ்சிபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முருகப் பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, பூர்ணசந்திரன் என்ற இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டார்.
சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு, பூர்ணசந்திரன் குடும்பத்துக்கு எந்த நிதியுதவியும் வழங்கவில்லை. மாவட்ட அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ கூட நேரில் சென்று அவர்களைப் பார்க்கவில்லை. இதன் மூலம், இந்துக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக அரசு நடத்துவது தெரிகிறது.
அரசு செலவில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாக்களில் திராவிட மற்றும் கம்யூனிச சிந்தனை கொண்டவர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வியக்கங்கள் புத்தகத் திருவிழாவை தங்களின் பிரச்சார மேடையாகப் பயன்படுத்துகின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளன. பாஜக அரசு எந்தத் திட்டத்திற்கும் தனிநபர் பெயரை வைப்பதில்லை. பொதுவான பெயரையே வைக்கிறது என்றார்.