விஜய்யின் அரசியல் நகர்வுகள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு சலசலப்புகளை உருவாக்கப்போகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தவெகவை உண்மையில் திமுகவும், அதிமுகவும் குறைத்து மதிப்பிடுகிறதா?
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயமாக வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது திமுக. அதேநேரத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கிவிடலாம் என்ற கனவோடு அதிமுக களமிறங்கியுள்ளது. ஆனால், தவெக களத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பது இதுவரை யாராலும் கணிக்க முடியாத ஒன்று என்பதே உண்மை.
எம்ஜிஆர் அரசியலில் சாதித்தார் என்றால், அவர் அதிமுகவை தொடங்கும் முன்பே திமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டவர். அதுமட்டுமின்றி கட்சி தொடங்கியவுடன் திண்டுக்கல் இடைத்தேர்தல், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை நிரூபித்து 1977-ல் ஆட்சியை பிடித்தவர். ஆனால், விஜய் இதுவரை அரசியல் களத்தில் தன்னை நிரூபிக்கவில்லை. எனவே, அவரின் அரசியல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போதுவரை புரியாத புதிர்தான்.
விஜய்யின் தவெக இப்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் இரு பிரமாண்டமான மாநாடுகளை நடத்தினார். அதேபோல அவரின் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டு ஆச்சர்யம் தந்தனர். கரூர் பரிதாபம் கரும்புள்ளி என்றாலும், அதற்குப் பின்னும் அவருக்கான மாஸ் குறைந்தது போல் தெரியவில்லை என்பதே கள யதார்த்தம்.
விஜய் குறைத்து மதிப்பிடப்படுகிறாரா?
தவெக குறித்து இப்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி அக்கட்சி ஒட்டுமொத்தமாக 10 முதல் 20 சதவீத வாக்குகளைப் பெறலாம். அதிகபட்சமாக வைத்துக்கொண்டாலும் 20 சதவீத வாக்குகளை வைத்து ஒரு தொகுதியில் வெற்றிபெற முடியாது. எனவே அவரின் வாக்குகள் யாரோ ஒருவரின் வெற்றியை கடுமையாக பாதிக்கும். அதே நேரத்தில் சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் தவெக கொஞ்சம் கூடுதலாக வாக்குகளை வாங்கினால், ஒருவேளை வெற்றியின் விளிம்பை தொடவும் வாய்ப்புள்ளது.
ஆட்சிக்கு எதிரான வாக்குகளைத்தான் விஜய் பிரிப்பார், எதிர்ப்பு வாக்குகள் சிதறும்போது நாம் எளிதில் வெல்லலாம் என கணக்குப்போடுகிறது திமுக. அதேநேரத்தில் திமுகவுக்கு எப்போதும் வழக்கமாக கிடைக்கும் மத, சாதி சிறுபான்மை வாக்குகளை விஜய் பிரிப்பார், அது தனக்கே சாதகமாகும் என்பது அதிமுகவின் எண்ணம்.
அதிமுக, திமுக போடும் இந்தக் கணக்குகளில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால், இந்த இடத்தில்தான் தவெகவை திமுக, அதிமுக குறைத்து மதிப்பிடுகிறதோ என்ற எண்ணம் உருவாகிறது. ஏனென்றால் 18 முதல் 30 வயது வரையிலான இளம் வாக்காளர்களின் முதல் தேர்வாக தவெக இருக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி இளம் வாக்காளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து தங்கள் பெற்றோர், குடும்பத்தினர் வாக்குகளையும் பெறலாம். விஜய்க்கு வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்கள் அனைத்து கட்சிக்காரர்களின் வீடுகளிலும் இருக்கலாம். எனவே, தற்போதைய சூழலில் விஜய் வாக்குகள் யாருக்கு பாதிப்பை உருவாக்கும் என்பது நிச்சயமாக தெரியவில்லை.
அதேபோல, தேர்தல் நேரத்தில் பிரமாண்ட பிரச்சாரம், கூடுதல் கவனிப்புகள், பணப்பட்டுவாடா என பிரதான கட்சிகள் வழக்கமான ஃபார்முலாவை கையில் எடுக்கும். அந்த ஃபார்முலாவில் 30 வயதுக்கு மேற்பட்டோரின் மனநிலை மாறலாம். ஆனால், இளம் வாக்காளர்களில் பெரும் பகுதி தவெகவை நோக்கி செல்வது உறுதி என்று அரசியல் விமர்சகர்கர்கள் சொல்கின்றனர்.
அதேபோல இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கிக்கும் பெரும் பாதிப்பை விஜய் உருவாக்கலாம். தமிழ் தேசியத்தை முன்வைக்கும் சீமானுக்கு என்று ஒரு நிலையான வாக்குகள் இருந்தாலும், அவருக்கு புதிய தலைமுறை வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்புவர்களின் வாக்குகள் இதுவரை அதிகம் கிடைத்து வந்தது. இது இம்முறை விஜய்க்கு போகலாம் என்பதால், சீமானுக்கும் சேதாரம் அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
திமுக, அதிமுக தங்கள் கடந்த கால சாதனைகள், வருங்கால வாக்குறுதிகளை முன்வைத்தே வீடுகளுக்கு பிரச்சாரத்துக்கு செல்லும். ஆனால், விஜய் ஏற்கெனவே ஒவ்வொரு வீடுகளிலும் புகுந்துவிட்டார். இளம் வாக்காளர்களில் கணிசமானோர் கொள்கை, வாக்குறுதிகள், எதிர்கால திட்டங்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் விஜய்க்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். எனவே இம்முறை அவர் ஏற்படுத்தப்போகும் தாக்கம் யாரின் ஆட்சிக் கனவை பறிக்கப்போகிறது என்று பார்ப்போம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
எப்படி பார்த்தாலும், விஜய் 2026 தேர்தலில் அரசியல் பிரளயத்தை ஏற்படுத்துவது உறுதி. அந்தப் பிரளயம் விஜய்யை முதல்வராக்கப் போகிறதோ இல்லையோ, பலரின் அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றலாம். எனவே, தேர்தல் முடிவுகளில் விஜய் கொடுக்கப்போகும் ‘ஷாக் ட்ரீட்மென்ட்’க்கு எல்லோரும் தயாராக இருக்கவேண்டும் என்பதே இப்போது இருக்கும் ஒரே வழி!