வேல்முருகன் |கோப்புப் படம்

 
தமிழகம்

‘ஆலைகளின் பாதுகாப்பு சோதனைகளில் குறைபாடா?’ - கிருஷ்ணகிரி சம்பவத்தை முன்வைத்து வேல்முருகன் கேள்வி

வெற்றி மயிலோன்

சென்னை: “தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்புச் சோதனைகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா?” என தவெக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ராயக்கோட்டையில் செயல்படும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் தொட்டிக்குள் இறங்கிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல், ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலையின் முகப்புக் கட்டமைப்பு இடிந்து விழுந்ததில் மேலும் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சில நாட்கள் இடைவெளியில் ஒரே மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு விபத்துகளும் மொத்தம் ஆறு தொழிலாளர்களின் உயிரைப் பறித்துள்ளன. தொழில்துறை வளர்ச்சியில் முன்னிலை வகிப்பதாகப் பெருமை பேசும் தமிழகத்தில், தொழிற்சாலைகளுக்குள் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளன.

டாடா தொழிற்சாலையில் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் நச்சுவாயுத் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளியாகியுள்ள தகவல்கள், ஆபத்தான பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புச் சோதனைகள் குறித்த சந்தேகங்களை எழுப்புகின்றன.

அதேபோல், சிப்காட் தொழிற்சாலையில் கட்டுமானக் கட்டமைப்பு இடிந்து விழுந்திருப்பது பொறியியல் கண்காணிப்பு மற்றும் கட்டுமானத் தரக்கட்டுப்பாடு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

இந்த இரண்டு விபத்துகளிலும் தொழிற்சாலை நிர்வாகங்களின் பொறுப்பு என்ன? ஒப்பந்த நிறுவனங்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றினவா? தொழிலாளர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டார்களா? பாதுகாப்புக் குறைபாடுகள் முன்பே கண்டறியப்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இக்கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் அரசு பதிலளிக்க வேண்டும்.

எனவே, தமிழக அரசு உடனடியாக, மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் காலவரையறையுடன் கூடிய சிறப்புப் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொண்டு அதன் முடிவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் மூடப்பட்ட அபாயகரமான பணியிடங்களில் நச்சுவாயு பரிசோதனை, ஆக்சிஜன் அளவைக் கண்காணித்தல், அனுமதிச் சான்று, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மீட்புக் குழு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைக் கட்டிடங்கள், கட்டுமானங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றின் உறுதித்தன்மையைத் தகுதிபெற்ற சுயாதீன நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பணியின் அபாயத்திற்கு ஏற்ப பயிற்சியும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒசூர் விபத்துகள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி, பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் நிர்வாக அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதிலும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் காட்டப்படும் வேகம், தொழிலாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் வெளிப்பட வேண்டும். தொழில்துறை வளர்ச்சியின் வெற்றியை முதலீட்டுத் தொகையாலும் உற்பத்தி அளவாலும் மட்டுமே கணக்கிடக் கூடாது. அங்கு பணியாற்றும் மனிதர்களின் பாதுகாப்பும் அதற்கான முக்கிய அளவுகோலாக இருக்க வேண்டும்.

தொழிலாளர்களின் உழைப்பில் தொழிற்சாலைகள் வளரலாம். ஆனால் அவர்களின் உயிரிழப்பில் எந்த வளர்ச்சியையும் நியாயப்படுத்த முடியாது.

ஒசூரில் நிகழ்ந்த ஆறு உயிரிழப்புகளுக்கும் உரிய நீதி கிடைப்பதோடு, எதிர்காலத்தில் இத்தகைய துயரங்கள் நிகழாத வகையில் தமிழக அரசு உறுதியான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT