தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் பகுதியில் தமிழக தொல்லியல் துறை ஆய்வு

செய்திப்பிரிவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் தொடர்பாக தமிழக தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக அரசின் தொல்லியல் துறை துணை இயக்குநர் யதீஷ்குமார் தலைமையில், உதவி இயக்குநர் லோகநாதன் மற்றும் தொல்லியல் அலுவலர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் இன்று திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

காலை 8 மணியிலிருந்து பகல் 12 மணி வரை தீபத் தூணின் முழு பகுதியை ஆய்வு செய்து, அதில் உள்ள விவரங்களை நகல் எடுத்தனர். எனினும், இந்த ஆய்வு தொடர்பான எந்த அதிகாரபூர்வ தகவலையும் தொல்லியல் துறையினர் வெளியிடவில்லை.

முன்னதாக, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், தீபம் ஏற்றலாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றவில்லை. தொடர்ந்து, மனுதாரர் ராம.ரவிக்குமார் மற்றும் 10 பேர் அடங்கிய குழுவினர் மலைக்குச் சென்று தீபம் ஏற்றவும் போலீஸார் அனுமதி மறுத்தனர்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்தபோதிலும், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அதை தள்ளுபடி செய்தது. உத்தரவை அமல்படுத்தாததால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதேநேரம், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையே, மலை உச்சியில் உள்ள தூண், கார்த்திகை தீபத் தூண்தான் என்று ஒரு தரப்பினரும், அது ‘சர்வே கல்’ என்று மற்றொரு தரப்பினரும் தகவல்களை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT