மருத்துவர் ஏ.அரவிந்த்
சென்னை: அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த், மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் (டிஎம்இ) இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி இருந்தார்.
அவரது பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிந்ததால், மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலராக இருந்த லோகநாயகி, மருத்துவக் கல்வி இயக்குநராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய இயக்குநரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன் பொறுப்பில் இருப்பவர்களைத்தான் தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் நியமிப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால், விதிமுறைகளை திருத்தி நேர்முகத் தேர்வு என்ற பெயரில், ஓய்வு பெற்ற டீன் அந்தஸ்திலான ஒருவரை வைத்து, மருத்துவக் கல்வி இயக்குநரை தேர்வு செய்யும் முறைக்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில், மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்தில் தவெக அரசின் கூட்டணி கட்சி தலைவரின் தலையீடு இருப்பதாகவும், அதனால், தகுதியான டீன்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த அரசு மருத்துவர்கள், நியாயமான முறையில் தகுதியான டீனை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள டீன்களில், தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் முதலிடத்தில் இருந்த சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஏ.அரவிந்த், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக நேற்று நியமிக்கப்பட்டார்.
இதற்கான அரசாணையை சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது வெளியிட்டுள்ளார். இதையடுத்து, மாலையே அவர் டீன் பொறுப்பில் இருந்து விலகி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மருத்துவக் கல்வி இயக்குநராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள், தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளனர்.
ஏ.அரவிந்த், எம்பிபிஎஸ் முடித்த பிறகு எம்டி படிப்பில் பொது மருத்துவம், டிஎம் படிப்பில் இரைப்பை குடல் நலத்துறை முடித்துள்ளார்.
பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை குடல் சிகிச்சை துறை இயக்குநராகவும் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும் இருந்து உள்ளார்.
மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஏ.அரவிந்த் ஓராண்டு காலம் அந்தப் பதவியில் இருப்பார்.