சென்னை: “தொகுதி மறுவரையறை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட்டம் நடத்துவது கேலிக்கூத்தானது” என தவெக குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா விமர்சித்தார்.
இது தொடர்பாக, பெரம்பலூரில் திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா எம்.பி. இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “தமிழகத்தில் எம்.பி.க்கள் இல்லாத எந்தக் கட்சியாக இருந்தாலும் கூட்டம் போடலாம். ஆனால், தொகுதி மறுவரையறை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட்டம் போடுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. இது மக்களை திசை திருப்பும் செயல்” என தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்தக் கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.