ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரயில் நிலையம்.

 
தமிழகம்

சோழபுரம், கரிவலம் வந்த நல்லூர் ரயில் நிலையங்களை மீண்டும் அமைக்க ஒப்புதல்

ரயில்வே அமைச்சரின் கடிதத்தால் பயணிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: தென்காசி - விருதுநகர் ரயில் வழித்தடத்தில் மீட்டர்கேஜ் காலத்தில் மூடப்பட்ட சோழபுரம், கரிவலம் வந்த நல்லூரில் ரயில் நிலையங்களுக்கு மீண்டும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சரின் கடிதத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி - விருதுநகர் இடையே 122 கி.மீ. தூரம் உள்ள ரயில் வழித்தடத்தில் தென்காசியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் கடையநல்லூர், அடுத்த 9 கி.மீ.ல் பாம்புகோவில் சந்தை, அடுத்த 11.8 கி.மீ.ல் சங்கரன்கோவில், அடுத்த 33 கி.மீ.ல் ராஜபாளையம், அடுத்த 11.3 கி.மீ.ல் வில்லிபுத்தூர், அடுத்த 16.9 கி.மீ.ல் சிவகாசி, அடுத்த 2.9 கி.மீ.ல் திருத்தங்கல், அடுத்த 21 கி.மீ.ல் விருதுநகர் என 7 ரயில் நிலையங்கள் உள்ளன.

1990-களில் போதிய வருமானம் இல்லை எனக்கூறி தென்காசியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருந்த நயினாகரம், சங்கரன்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருந்த கரிவலம் வந்த நல்லூர் ஆகிய இரு ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டபோது சங்கரன்கோவிலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் இருந்த சோழபுரம், திருத்தங்கலில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள சங்கரலிங்கபுரம் ஆகிய ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

இதனால் சங்கரன்கோவில் - ராஜபாளையம் இடையே 33 கி.மீ.க்கு ரயில் நிலையமோ, கிராசிங்கோ இல்லாத நிலை ஏற்பட்டது. இவ்வழியே செல்லும் ரயில்கள் கிராசிங்குக்காக சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையத்தில் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் தென்காசி - விருதுநகர் இடையே மூடப்பட்ட ரயில் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர், தொழில்துறையினர், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சோழபுரம், கரிவலம் வந்த நல்லூரில் ரயில் நிலையங்கள் அமைக்க தெற்கு ரயில்வே சார்பில் திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அளித்த மனுவுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அனுப்பிய கடிதத்தில் கரிவலம்வந்தநல்லூர், சோழபுரம் ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ராஜபாளையம், சங்கரன்கோவில் சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமின்றி, கிராசிங்குக்காக ரயில்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என்பதால் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT