சென்னை: ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சுப்பாராவ் பாராட்டியுள்ளார்.
தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தில் வணிக எழுத்தராக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த செல்வி வித்யா ராம்ராஜ், ஆசிய விளையாட்டில் 3 வெவ்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதுபோல, தெற்கு ரயில்வேயின் சென்னை தலைமையக பணியாளர் பிரிவில் மூத்த எழுத்தராகப் பணியாற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த செல்வி பரணிகா இளங்கோவன், மகளிர் போல் வால்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்த போட்டிப் பிரிவில் இந்தியா பெறும் முதலாவது பதக்கம் இதுவாகும்.
திருச்சிராப்பள்ளி கோட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆர்.ராஜேஷ், ரிலே போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். விளையாட்டு வீரர்களின் இந்த சாதனையைப் பாராட்டி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவ், தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கத்தின் தலைவர் கணேஷ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்போட்டிகளில் பெருமை சேர்த்த இதர ரயில்வே ஊழியர்களான தவ்பீக் (திருவனந்தபுரம்), செல்வி அநாமிகா (பாலக்காடு), செல்வி டேவிட்
(சேலம் - ஈரோடு) ஆகியோருக்கும், அவர்களது பயிற்சியாளர்கள், தொழில்நுட்பக் குழுவினருக்கும் தெற்கு ரயில்வே தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.