சென்னை: ஒப்பந்த முறையில் மின் கணக்கீட்டாளர்களை நியமிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2.6 கோடிக்கும் மேல் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளில் மின்சார பயன்பாடு 60 நாட்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.
மின் வாரியத்தின் மின்கணக்கீட்டாளர் ஒவ்வொரு இணைப்புக்கும் கணக்கீட்டுக்கான செயலி மூலம் கணக்கீடு செய்து நுகர்வோரின் கணக்கீட்டு அட்டையில் பயன்பாடு மற்றும் கட்டண தொகையை பதிவு செய்வார், செயலி மூலம் பதிவு செய்யப்பட்ட தரவுகள் தானாக மின் வாரியத்தின் தரவுத்தளத்தில் சேமிக்கப்படும்.
செயலி இல்லாத போது கணக்கீட்டாளரே நேரடியாக கணக்கீட்டு தரவுத்தளத்தில் பதிவு செய்வார். இதனிடையே மின் வாரியத்தில் போதிய அளவில் மின்கணக்கீட்டாளர்கள் இல்லை என்றும் 5 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பதவி உயர்வு பெற்ற கணக்கீட்டு ஆய்வாளர்கள், கணக்கீட்டு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர். குறைவாக பணியாளர்கள் இருப்பதால் கணக்கீட்டில் தாமதம் ஏற்படுகிறது, இதனால் நுகர்வோருக்கு மின் கட்டணமும் அதிகரிக்கிறது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த முறையில் மின் கணக்கீட்டாளர்கள் நியமிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், அடுத்த 6 மாதங்களுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த முறையில் தற்காலிகமாக கணக்கீட்டாளர்களை நியமிக்கவும், எவ்வளவு பணியாளர்கள் தேவை என்பதை பகுதி வாரியாக ஆராய்ந்து, மேற்பார்வை பொறியாளர்களின் ஒப்புதலுக்கு பின் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கத்தினர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் கண்ணன் கூறுகையில், “மின் கணக்கீட்டாளர்களை ஒப்பந்த முறையில் நியமிப்பது சட்டவிரோதமானது. இதை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளோம்” என்றார்.