சென்னை: “திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களுக்கு இடம் கொடுத்து, அரசு சிறப்பு அதிகாரி (ஜோதிடர் ரிக்கி ராதன் வெற்றிவேல்) நியமனத்தை வாபஸ் பெற்றிருப்பது, தவெக அரசின் பலவீனமான நிர்வாக அணுகுமுறையின் முதல் வெளிப்பாடாகும்” என்று பாஜக மாநில மகளிரணித் தலைவர் எஸ்.கவிதா ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கைகள், ஆட்சியின் தீர்மானத் திறன் மற்றும் அரசியல் சுயாதீனத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு, அழுத்தங்களுக்கு இடம் கொடுத்து, அரசு சிறப்பு அதிகாரி நியமனத்தை வாபஸ் பெற்றிருப்பது, இந்த அரசின் பலவீனமான நிர்வாக அணுகுமுறையின் முதல் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
மேலும், சட்டப்பேரவையில் சனாதனம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து வெளியிட்டபோதும், முதல்வர் விஜய் அமைதி காத்தது, திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், தற்போது ஆதரவளித்துள்ள திமுகவின் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுமோ என்ற அச்சத்தின் வெளிப்படாகவே பார்க்க முடிகிறது.
இது, தற்போதைய தவெக அரசு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவை சார்ந்தும், அவர்களின் அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்டு திமுகவின் பி டீமாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை மட்டுமே நம்பிய அரசியல் தொடரும் வரை, தவெக தனது தனித்துவமான அரசியல் அடையாளத்தையும் உறுதியான நிர்வாகத்தையும் நிலைநிறுத்த முடியாது.
மக்கள் எதிர்பார்ப்பது உறுதியான தலைமைத்துவத்தையும், அழுத்தங்களுக்கு அஞ்சாத நிர்வாகத்தையும் தான்; சமரச அரசியலை அல்ல. மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை வழங்கிய முதல்வர் விஜய் தலைமையிலான இந்த அரசு விரைவில் மக்களின் நம்பிக்கையை இழக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.