பெ.சண்முகம் | கோப்புப் படம்
சென்னை: ‘வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திட வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் சட்டவிரோத குவாரி சுரங்கங்களைத் தடுக்கவும், தாது மணல் மற்றும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்திடவும், மணல், எம்.சாண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை போக்கிடவும் தமிழ்நாடு அரசு கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மத்திய அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் 1957-ன் 15 மற்றும் 23சி ஆகிய பிரிவுகள் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி தான், தமிழ்நாடு கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டியெடுத்தல், கொண்டு செல்லுதல் மற்றும் சேமித்து வைத்தல் மற்றும் கனிம விற்பனையாளர்கள் விதிகள், 2011ல், 3ஏ என்ற பிரிவை சேர்த்து தான் தமிழ்நாடு அரசு இந்த தடையை விதித்தது. தமிழ்நாடு அரசு விதித்த இந்த தடையை தான் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தடை நீக்கப்பட்டதால் தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படவும், செயற்கையான விலை உயர்வு ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும்.
கனிம வளங்களின் சட்டவிரோதக் கடத்தல் அதிகரிக்கக்கூடும். இயற்கை வளங்கள் வரன்முறை இல்லாமல் வெட்டி எடுக்கப்படும். கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். ஏழை, எளிய மக்களும் வீடு கட்ட முடியாத நிலை உருவாகும்.
எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.