புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே 13-ம் தேதி நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, மற்ற 21 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி கடிதம் அளித்தார். இதை ஏற்று, 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
அவரது இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், ‘கட்சி மாறி வாக்களித்தவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘சட்டப்படி, 15 நாட்களுக்குள் எம்எல்ஏக்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்துவிட்டதால், தகுதி நீக்கம் என்ற கோரிக்கையே எழவில்லை. எனவே, தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது சரிதான்’ என்று கூறி செல்வகுமாரின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செல்வகுமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.