திருநெல்வேலி: “திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய அரசு செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி மின் வாரியத்தை தனியார்மயம் ஆக்குவதற்கு முயற்சிக்கிறது” என்று சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மு.அப்பாவு குற்றம்சாட்டினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சாதாரண கைது நடவடிக்கைக்கும் மிசா சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுக்கும் வேறுபாடு உள்ளது. சாதாரண வழக்குகளில் காவல் துறை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும். ஆனால், மிசா சட்டத்தின் கீழ் எவ்வித வழக்கும் இன்றி நேரடியாக சிறையில் அடைக்க முடியும். இந்த அடிப்படைச் சட்ட அறிவு கூட தற்போதைய முதல்வருக்கும், சட்ட அமைச்சருக்கும் இல்லை. சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை அவர்கள் கையாண்ட விதம் வெட்கக்கேடானது.
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போதைய அரசு தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி வருகிறது. இதனை காரணம்காட்டி செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி மின் வாரியத்தை அதானி குழுமத்துக்கு தனியார்மயம் ஆக்க முயற்சி நடக்கிறது. அதற்குப் பின்புலமாக மின் கட்டணத்தை 25 முதல் 50 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
சேலத்தில் குடிநீர் விநியோகம் ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்டு விட்டது. தூய்மைப் பணியாளர்களின் பணிகளும் அவுட்சோர்சிங் முறையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போராடும் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்துப் பேச அரசுத் தரப்பு மறுத்து வருகிறது.
முதல்வரின் லண்டன் பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்கான முறையான வழிகாட்டுதல்களின்படி அமையவில்லை. பொதுவாக முதலீடுகளை ஈர்க்கச் செல்லும்போது துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் முன்னரே சென்று கூட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். ஆனால், இம்முறை அவ்வாறு நடைபெறவில்லை.
மேலும், தமிழகத்தின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பது திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அடித்தளம்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு முறையான பேசும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சட்டப்பேரவை தலைவர் நடுநிலையின்றி ஆளுங்கட்சியினரின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பேச முற்படும்போது, ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து வரும் துண்டுச் சீட்டுகளைப் பார்த்துவிட்டு, எதிர்க்கட்சியினரை பேசவிடாமல் சட்டப் பேரவை தலைவர் தடுத்து விடுகிறார்.
ஆளுங்கட்சி ரீல்ஸ் போடுவதற்காகவே சட்டப்பேரவை நிகழ்வு நேரலை செய்யப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின், நான் சட்டப்பேரவை தலைவராக இருந்தபோது, எனது நிர்வாகத்தில் தலையிட்டது கிடையாது. ஆனால் இன்று அப்படி இல்லை. சட்டப்பேரவை தலைவர் என்பவர் முதல்வரின் பிடியில்தான் உள்ளார்.
பட்டினப்பாக்கம் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டம் தேவையற்றது. இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டதாக கூறி ஊழல் என்றனர். தற்போது ரூ.20 முதல் ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு தினசரி பல கோடி ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. தவெக ஆட்சியில் ஊழல் , லஞ்சம் மிக அதிகமாகிவிட்டது. அனைத்து பணிகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.