தமிழகம்

சோழிங்கநல்லூரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை - 100+ போலீசார் அதிரடி சோதனை

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

பெ.ஜேம்ஸ்குமார்

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில் அதிகாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் துணை ஆணையர் ரகுபதி தலைமையில், செம்மஞ்சேரி உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் அடங்கிய சிறப்பு குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகள் போலீஸாரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.

போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், போலீஸார் 11 குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சோதனை நடத்தினர். மாணவர்கள் தங்கியிருந்த வீடுகள், அறைகள் உள்ளிட்ட இடங்களில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதிகாலை நேரத்தில் தொடங்கிய இந்த அதிரடி சோதனை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. சோதனையின்போது சிறு சிறு பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா மற்றும் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணப் பொருட்கள் உள்ளிட்டவை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செம்மஞ்சேரி உதவி ஆணையரிடம் கேட்டபோது, சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு உள்ளதை தடுக்கும் நோக்கிலும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் போதைப் பொருட்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

வழக்கமாக அதிகாலை நேரத்தில் அமைதியாக காணப்படும் சோழிங்கநல்லூர் குடியிருப்பு பகுதியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிந்து சோதனை நடத்திய சம்பவம் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT