மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராமசாமி

 
தமிழகம்

மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் உட்பட 10 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் தொடர்பாக லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அண்மையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் அடிப்படையில், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ஆர்.ராமசாமி உட்பட 10 அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் 4 ஒப்பந்ததாரர்கள் என மொத்தம் 14 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகளில் தலைமைப் பொறியாளர் ஆர்.ராமசாமி, உதவி செயற்பொறியாளர்கள் வி.எஸ்.மணியன், எம்.பாலமுருகன், கே.மயிலேறிநாதன், தொழில்நுட்ப உதவியாளர்கள், ஒப்பந்த பணியாளர், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சோதனையின்போது உரிய கணக்குகள் மற்றும் ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ரூ.1.35 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் அலுவலகத்தின் 3 அசல் பதிவேடுகளும், வழக்கில் சேர்க்கப்பட்ட 14 பேரிடமிருந்து எழுத்துப்பூர்வ வாக்குமூலங்களும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் சூரிய கலா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT