திருவண்ணாமலை தொகுதி எம்பி. சி.என்.அண்ணாதுரை வீட்டில் நேற்று சோதனை முடிந்து வெளியே வந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்.

 
தமிழகம்

திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தொகுதி திமுக எம்பியும், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று 8 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 7 மணியளவில் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறை வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் ஆய்வாளர்கள் மைதிலி மற்றும் அருள் பிரசாத் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீஸார் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

சி.என்.அண்ணாதுரை, ‘ஏபியு கன்ஷ்ட்ரக்‌ஷன்’ என்ற பெயரில் அரசு ஒப்பந்ததாரராகச் செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் பல கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஒப்பந்தம் எடுத்து பல்வேறு பணிகளை செய்து வருவதால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், திருவண்ணாமலை அடுத்த மலப்பம்பாடி ஏரியில் மண் அள்ளப்பட்டதில் இவருக்கு சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சோதனை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாதுரை, எம்பி.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கேட்டபோது பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து சி.என்.அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆட்சியில் வடக்கு மண்டல திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் மாதம் நடந்தது. அந்த மாநாடு குறித்து கேள்வி எழுப்பினர். பிறகு எனது உறவினர்கள் நடத்தும் ஏபியு கட்டுமான நிறுவனம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இடைத்தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் உள்நோக்கத்துடன் இந்த சோதனை நடந்துள்ளது. என்னை தேர்தலுக்குச் செல்லவிடாமல் தடுப்பதுதான் இதன் நோக்கம். அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளோம். அவர்கள் கேட்ட ஆவணங்கள் அனைத்தும் வழங்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT