படம்:  ர.செல்வமுத்துகுமார் 

தமிழகம்

மணல் குவாரி முறைகேடு: திருச்சியில் 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, திருச்சியில் உள்ள 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அளவுக்கு மீறி மணல் அள்ளி பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமலாக்கத் துறை புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, திருச்சி காஜாமலை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே உள்ள கனிமவளத்துறை கண்காணிப்பு பொறியாளர் குமரவேல் வீடு, ரேஸ்கோர்ஸ் சாலை மத்திய மண்டல காவல் துறை தலைவர் அலுவலகம் அருகே உள்ள நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர்கள் சுகுமாரன், ஜெயக்குமாரி ஆகியோர் வீடுகளில் சென்னையை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருச்சி காஜாமலை காலனி பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை நீர்வள ஆதார பிரிவு உதவி பொறியாளர் சாதிக் பாஷா வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றது. அவரது வீட்டில் இருந்து இரண்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஹேமச்சித்ரா தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடத்தி வரும் அதிரடி சோதனை, அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT