காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான நெல் மூட்டைகளைத் தனியார் அரிசி ஆலைகளில் அரைத்து அரிசியாகப் பெறும் நடைமுறையில், சுமார் ரூ.10.84 கோடி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 11 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், தனியார் நவீன அரிசி ஆலைகளுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படும்.
அங்கு நெல் அரைக்கப்பட்டு, அதற்குரிய அளவில் அரிசி நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த நடைமுறையில் காஞ்சிபுரம் மண்டலத்தில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மண்டல மேலாளராகப் பணியாற்றிய அருள் வனிதா, தரக்கட்டுப்பாட்டு உதவி மேலாளர் ஜெயவேல் மற்றும் 4 தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் இணைந்து செயல்பட்டு 1,792.633 மெட்ரிக் டன் நெல் பற்றாக்குறையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு ரூ.10 கோடியே 84 லட்சத்து 47 ஆயிரத்து 484 இழப்பு ஏற்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அருள் வனிதா, ஜெயவேல் ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் திம்மசமுத்திரம், சிறுகாவேரிப்பாக்கம், முசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 9 நவீன அரிசி ஆலைகள் மற்றும் தொடர்புடைய இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள் வனிதாவின் வீட்டிலும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஜெயவேலின் வீட்டிலும் என மொத்தம் 11 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது முறைகேடு தொடர்பான ஏதேனும் ஆவணங்கள், நெல் மற்றும் அரிசி இருப்பு விவரங்கள், கொள்முதல் மற்றும் அரவை தொடர்பான பதிவுகள் உள்ளனவா என போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையின் முடிவில்தான் முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.