கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றோர். | படம்: எல்.பாலச்சந்தர் |
ராமேசுவரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று தொடங்கியது. இன்று காலை சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று மாலை கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம் எதிரேயுள்ள கொடி மரத்தில் நெடுந்தீவு பங்குத் தந்தை பத்திநாதன் கொடியேற்றிவைத்து, விழாவைத் தொடங்கிவைத்தார்.
ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை தாமஸ் பரிபாலனன், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம். முதன்மைகுரு ஜோசப் தாஸ் ஜெபரத்தினம் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, திருச்ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, அந்தோணியார் தேரோட்டம் நடைபெற்றது. இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பக்தர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, 92 விசைப்படகு, 26 நாட்டுப் படகு என 118 படகுகளில் இந்திய பக்தர்கள் 3,741 பக்தர்கள் கச்சத்தீவுக்கு வந்தனர். அவரை நேற்று காலை ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து வழியனுப்பிவைத்தார்.
அவர்களது பாதுபாப்புப் பணியில் இந்திய கடற்படை கப்பல், கடலோரக் காவல் படை மற்றும் தமிழக மெரைன் போலீஸாரின் ரோந்துப் படகுகள் ஈடுபட்டன.
கச்சத்தீவில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று (பிப். 28) காலை சிறப்புத் திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. கொடி இறக்கத்துக்குப் பிறகு இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள், தமது நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.