ஏஎன்எஸ் பிரசாத்
சென்னை: “தமிழக பாஜகவில் தலைவர் மாற்றத்தை விட, தலைவரின் மனமாற்றமே முக்கியம். 2029 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற கட்சித் தலைமை களப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ், தமிழர், தமிழகத்தின் உரிமை மற்றும் வளர்ச்சிக்காக மாநில பாஜக தலைமை களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நிர்வாகிகள் ஒற்றுமையாகச் செயல்பட்டால், 2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள கட்சியை வலுப்படுத்த முடியும்.
மீண்டும் மீண்டும் பயிற்சி வகுப்புகள், பூத் கமிட்டி அமைப்புகள், அரங்கக் கூட்டங்கள் நடத்திப் புகைப்படங்களை வெளியிடுவதால் மட்டும் கட்சி வளர்ச்சி அடையாது. மண்டல் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை ஊக்கப்படுத்தி, கட்சி நிகழ்ச்சிகளை மக்கள் பங்கேற்கும் மக்கள் நல நிகழ்ச்சிகளாக நடத்த மாநிலத் தலைமை தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
மாநில அணி நிர்வாகிகள் தங்களது மண்டல் மற்றும் பூத் தலைவர்களை நேரில் சந்தித்து இணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்டத் தலைவர்களுக்கு இணையாக மாவட்ட நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை அளிப்பதுடன், மண்டல் தலைவர்களுக்கு முன்னுரிமையும் அங்கீகாரமும் வழங்க வேண்டும். இதன் மூலமே கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த முடியும்.
மேலும், பல்வேறு காரணங்களால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், விலகிச் சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் அரவணைத்து பாஜகவில் இணைக்க வேண்டும். இதற்காக மாநிலத் தலைவர் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் அன்பான அழைப்புக் கடிதம் அனுப்பி, மீண்டும் கட்சிக்கு வரவேற்க வேண்டும்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழகத்துக்கு வரும்போது, பணம் வழங்கி சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவதாகக் கூறப்படும் நடைமுறைக்கும், குறிப்பிட்ட சில நிர்வாகிகளே மீண்டும் மீண்டும் சந்திக்கும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏற்கெனவே சந்தித்தவர்கள் வாய்ப்பைத் தவிர்த்து, இதுவரை சந்திக்காத தகுதியான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
தொண்டர்களை மதிப்பது, மண்டல் தலைவர்களை முன்னிலைப்படுத்துவது, நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது, கட்சியிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பது போன்ற அடிப்படை மாற்றங்களை மாநிலத் தலைமை நேர்மையுடனும் அக்கறையுடனும் செயல்படுத்த வேண்டும்.
தலைவர் மாற்றம், பதவி மாற்றம் என்பதைவிட அமைப்பு ரீதியான மாற்றத்துக்கும் தொண்டர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒற்றுமையுடனும் திட்டமிட்ட களப்பணியுடனும் செயல்படுவதே 2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான அடித்தளமாக அமையும்” என்று ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.