திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் ஏற்கெனவே 15 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு பெண் தொழிலாளர் நேற்று உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், ஓய்வு மற்றும் பணியில் இருந்த 83 பேர் மயக்கம் அடைந்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள், மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிறுணியம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 12 பெண்கள், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் என, 15 பெண் தொழிலாளர்கள் ஏற்கெனவே உயிரிழந்தனர்.
இந்நிலையில், சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கப்பிட்டா ஜுவாங்கா (24) என்ற பெண் நேற்று உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.