உயிரிழந்த ரவிச்சந்திரன்.

 
தமிழகம்

கூடலூர் அருகே ஓவேலியில் புலி தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு

வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

கூடலூர்: கூடலூர் அருகே மேலும் ஒருவரை புலி அடித்துக் கொன்றதால் ஆவேசமடைந்த கிராம மக்கள், வனத்துறையை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 9-ம் தேதி ஓவேலி பகுதிக்கு உட்பட்ட லாரெஸ்டன் நம்பர் 4 என்ற இடத்தில் பாலகிருஷ்ணன் என்பவரை புலி அடித்துக் கொன்றது.

வனத்துறையினர் 16 இடங்களில் கேமராக்களை வைத்து தினந்தோறும் கண்காணித்து வந்தனர். நேற்று காலை கூடலூர் வன அலுவலர் தேவராஜ் சம்பவ இடத்துக்கு சென்று கேமராக்களை ஆய்வு செய்தபோது புலியின் நடமாட்டம் எந்த கேமராவிலும் பதிவாகவில்லை.

இந்நிலையில், நேற்று மதியம் ஓவேலியை சேர்ந்த ரவிச்சந்திரன் (51) என்பவர் தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த புலி அவரை தாக்கி புதருக்குள் இழுத்துச் சென்று கொன்றுள்ளது.

புலியின் உறுமல் மற்றும் ரவியின் அலறல் சத்தம் கேட்ட ஓவேலி ஊராட்சி ஊழியர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து ரவிச்சந்திரனின் சிதைந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு திரண்ட பொதுமக்கள், புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கூறும்போது, ‘‘அடுத்து இந்த புலி யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என வனத்துறையிடம் தெரிவித்து வந்தோம்.

புலியை ட்ரோன் கேமராக்கள் மூலம் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறார்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு இங்கு எப்படி நாங்கள் வாழ முடியும்’’ என்றனர். கூடலூர் வன அலுவலர் தேவராஜ், டிஎஸ்பி கோபால கிருஷ்ணன், ஓவேலி வனச்சரகர் கருப்பு மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வனத்துறையினர் கூறும் போது, “சம்பந்தப்பட்ட புலியை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. வயது முதிர்வு, உடலில் காயம் போன்ற காரணங்களால் காட்டில் வேட்டையாடும் திறனை இழந்த அந்தப் புலி இரண்டு பேரை கொன்று தின்றிருக்கிறது.

உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அனுமதி கிடைத்துள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT