சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்

 
தமிழகம்

பழநியில் ரூ.60 கோடி அரசு நிலம் முறைகேடாக பதிவு: சார் பதிவாளர் மீது மேலும் ஒரு புகார்

ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அதே நாளில், அரசு புறம்போக்கு நிலத்தை சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், தனியாருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளதாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை கடந்த ஜூலை 6-ம் தேதி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.

இது தொடர்பாக, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அதே நாளில், பழநியில் உள்ள ரூ.60 கோடி மதிப்பிலான 1.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு தனிநபருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளதாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.

இந்த நிலம் பழநி நகராட்சிக்கு குப்பை கொட்டுவதற்காக நிலம் கொடுத்த ஒருவருக்கு, நிலப் பரிமாற்ற முறையில் வழக்கப்பட்டுள்ளது. மேலும், பெயர் பரிமாற்றம் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் இன்னும் நிலுவையில் இருப்பதால் தற்போது வரை ஆவணங்களில் ‘அரசு புறம்போக்கு’ என்ற பெயரிலேயே அந்த நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அதே ஜூலை 6-ம் தேதி எந்த வித ஆவணங்களையும் சரிபார்க்காமல், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சொத்துகளின் மதிப்பை குறைத்து காண்பித்து, ரூ.60 கோடி மதிப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபருக்கு ரூ.20 லட்சத்துக்கு சட்டவிரோதமாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்து கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

2025-ல் இவர் ஒட்டன்சத்திரத்தில் பணியாற்றியபோது ரூ.28 கோடி மதிப்பிலான சொத்தை முறைகேடாக பதிவு செய்த காரணத்துக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பணியாற்றிய போது நில அபகரிப்பு வழக்கும் ஜஸ்டின் மணிகண்டன் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இவர் பணியாற்றிய ஜூலை 6-ம் தேதி பலரின் சொத்துகள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அன்றைய தினம் அவரால் பதிவு செய்யப்பட்ட அனைத்து பதிவுகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும். மேலும், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொடர்ந்து, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ள வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

SCROLL FOR NEXT