ராஜ்குமார்
நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்த முயன்ற வழக்கில் 5-வதாக ஒருவரை மத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த சுகன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த- சர்வதேச சந்தை மதிப்பில் ரூ.135 கோடி மதிப்பிலான 137 கிலோ மெத்தம்பெட்டமைன் அக்.16-ம் தேதி மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தக் கடத்தல் திட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட தவெக நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த வேளாங்கண்ணி அருகே உள்ள கீழப்பிடாகை சிந்தாமணி பிரதான சாலையைச் சேர்ந்த பூபாலன்(42), வேளாங்கண்ணி காந்தி செட்டித் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(29), பிரதாபராமபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்த சதீஷ்(30) மற்றும் சுகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, வேதாரண்யம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
5-வது குற்றவாளி: இந்நிலையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்த முயன்ற வழக்கில் 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமாரை(35) அக்.23-ம் தேதி திருச்சியில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அதன்படி, ராஜ்குமார் ஆஜாரானார்.
அவரிடம், தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ராஜ்குமாருக்குச் சொந்தமான காரில் மெத்தம்பெட்டமைன் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், ராஜ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தொடர்ந்து, நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். ராஜ்குமாரை நவ.16-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ராஜ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.