கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
திமுக கூட்டணியில், அறிவாலயம் செல்லும் தபால்காரருக்கு கூட ஒரு சீட் வழங்கி விடுகின்றனர் என பாஜ முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கிண்டலடித்துள்ளார்.
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது: தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் அட்டூழியம், அராஜகம் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு தலைபட்சமாக செயல்பட்டு கஞ்சா உள்ளிட்ட பொய்வழக்குகளை எதிர்க்கட்சியினர் மீது போட்டு வந்தனர். பாஜக தொண்டர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.
மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். கரூருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வந்தவர் புழல் சிறையில் 400 நாட்களுக்கு மேல் இருந்துள்ளார். டிரான்ஸ்பார்மர் வழக்கு நாளை (இன்று) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கரூர் மக்களுக்கு எம்எல்ஏ நடவடிக்கை தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது.
கரூரில் நடுநிலையான நடவடிக்கைகள் கிடையாது என்பதால் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை மாற்றவேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடந்தது போல கரூரில் 60 முதல் 70 இடங்களில் மக்களை பட்டியில் அடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக வலிமையாக உள்ளது. திமுக கூட்டணியில், அறிவாலயம் செல்லும் தபால்காரருக்கு கூட ஒரு சீட் வழங்கி விடுகின்றனர். திமுக தோல்வி பயத்தில் உள்ளது. ராகுல் காந்தி இதுவரை ஒரு முறை கூட தமிழகம் வரவில்லை.
கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதால், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பதற்றமாக இருக்கிறார். அண்மையில் வெளியான கருத்து கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில்அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஜக மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனிடையே, மாவட்ட எஸ்.பி.யை மாற்ற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்திய நிலையில், கரூர் மாவட்ட எஸ்.பி . ஜோஸ் தங்கையா நேற்று மாற்றப்பட்டார்.