தமிழகம்

“டெல்லி ஜிங் ஜாங்... தமிழ்நாட்டு ஜிங் ஜாங்!”- காங்கிரஸ் கோஷ்டிகளை கலாய்த்த அண்ணாமலை

செய்திப்பிரிவு

“தமிழக காங்கிரஸை பொறுத்தவரை டெல்லி தலைமைக்கு யார் ஜிங் ஜாங் போடுவது என்று ஒரு குரூப்பும், தமிழ்நாட்டில் முதல்வருக்கு யார் ஜிங் ஜாங் போடுவது என்று ஒரு குரூப்பும் தான் உள்ளது. டெல்லி ஜிங் ஜாங்... தமிழ்நாட்டு ஜிங் ஜாங்” என பாஜக முன்னாள் மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

வேலூரில் அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைக்கு வைகோ சமுதாய மதநல்லிணக்க நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பேசியிருக்கிறார். பழியை அப்படியே திருப்பி மத்திய அரசின் மீது போட நினைக்கிறார்கள். இது திமுக-வுக்கும் ஸ்டாலினுக்கும் கை வந்த கலை.

சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு இது அனைத்தும் மாநில அரசின் பொறுப்பில் வரும். மத்திய அரசு, மாநில அரசுக்கு உதவுவதற்காகத் தான் நார்கோட்டிக் கன்ட்ரோல் பீரோ (என்சிபி) என்ற அமைப்பை வைத்துள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வன்முறை அதிகரித்துள்ளது. இதை மடை மாற்றுவதற்காக சம்பந்தமே இல்லாத ஒன்றை கொண்டு வந்து பேசுகிறார் முதல்வர். மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருவதைத்தான் தடுக்க முடியும். அதை திறமையாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி மாணவர்களை, நடுத்தர மக்களை குறிவைத்து தாக்கக்கூடிய விஷயம் எங்கிருந்து வந்தது? மாநிலத்துக்கு உள்ளே கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. இவ்வளவு பேசும் முதல்வர், என்னால் தமிழகத்தை, காவல் துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை எனச் சொல்லிவிட்டால் மத்திய அரசு பார்த்துக்கொள்ளும். கஞ்சா புழக்கத்தில் முதல்வராக நான் தோற்றுவிட்டேன் என முதல்வர் சொல்லட்டும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சாக்குப் போக்குச் சொல்லி மத்திய அரசின் மீது பழியை போடக்கூடாது.

தமிழக காங்கிரஸை பொறுத்தவரை டெல்லி தலைமைக்கு யார் ஜிங் ஜாங் போடுவது என்று ஒரு குரூப்பும், தமிழ்நாட்டில் முதல்வருக்கு யார் ஜிங் ஜாங் போடுவது என்று ஒரு குரூப்பும் தான் உள்ளது. டெல்லி ஜிங் ஜாங்... தமிழ்நாட்டு ஜிங் ஜாங். தமிழ்நாட்டு மக்களுக்காக பேசும் காங்கிரஸார் யாரும் இல்லை. ஒருவேளை தமிழக காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி சென்றால் ப.சிதம்பரம் புதிய கட்சி ஆரம்பித்து திமுக-வுடன் கூட்டணி வைப்பார் என்கிறார்கள். காங்கிரஸை சேர்ந்த தகவல் தரவு பிரிவை சேர்ந்தவர் விஜய்யை சந்தித்து ஒரு கருத்தை பதிவிடுகிறார். பிறகு, ஜோதிமணி தற்போது ஒரு கதையை பதிவு செய்கிறார். இதற்கு பதிலாக காங்கிரஸ் கடையை சாத்திவிடலாம்.

காங்கிரஸை பொறுத்தவரை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று சண்டை போட்டு 2026-ல் தேர்தல் நடக்கும்போது நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள். அதற்கான வேலைகளைத் தான் தற்போது செய்து வருகிறார்கள். குதிரை பேரம் பேசுகிறார்கள், ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள், அதிக சீட் கேட்கிறார்கள். தமிழகத்தில் நடக்கும் பஞ்சாயத்தை சரி செய்யத்தான் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வாரா வாரம் வருகிறார்கள். இவர்களுக்காக இன்டிகோ ஃபிளைட் டிக்கெட் போட்டே காங்கிரஸ் கஜானா காலி ஆகிவிடும்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயண நிறைவு விழாவுக்காக 4-ம் தேதி புதுக்கோட்டைக்கு அமித் ஷா வருகிறார். தமிழக அரசியலில் திருப்புமுனையாக கூட புதுக்கோட்டை நிகழ்வு இருக்கும். தமிழகத்தில் அரசு ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் பரிசு என்ன என்றால் கைது என்பதுதான். முதலமைச்சர் தனி உலகத்தில் வாழ்கிறார். ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் தமிழக ஆட்சி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT