அண்ணாமலை
கோவை: “தொகுதி மறுவரையறையை திமுக ஆதரித்துள்ளதால் இந்தியாவின் கூட்டணி வரைபடம் மாறியுள்ளது” என வி த லீடர்ஸ் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வி த லீடர்ஸ் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை என்பது நீண்ட காலமாக தமிழகம் காத்திருந்த நிகழ்வுகளில் ஒன்றாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை தொடர்பாக 131-வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, போதிய தெளிவு இல்லை. ஆனால், இந்த முறை அதில் தெளிவான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1971-ல் நடந்த மக்கள் தொகை அடிப்படையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். அதை 50 சதவீதம் நேரடியாக உயர்த்துகின்றனர்.
இவ்வாறு உயர்த்தப்பட்ட பின்னர் 816 எம்.பிக்கள் வருவர். மத்திய அரசின் மசோதாவை பார்க்கும்போது, 850 பேர் வரை செல்லும். தமிழ்நாட்டில் எம்.பிக்கள் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆகவும், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 234-ல் இருந்து 351 ஆக உயரும். 33 சதவீதம் மகளிருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்த மறுவரையறை மசோதாவை என்.டி.ஏ கூட்டணியில் இல்லாத திமுக, டிஆர்எஸ் கட்சி உள்ளிட்டவை வரவேற்றுள்ளன. வரும் 30-ல் கூடும் அமர்வில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக வரும் என நாங்கள் நம்புகிறோம்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை 4 முறை தொகுதி மறுவரையறை நடைபெற்றுள்ளது. கடைசியாக நடந்த மறுவரையறையின்போது, அதே எண்ணை வைத்துக் கொண்டு தொகுதியின் பெயரை மட்டும் மாற்றினர். இந்த முறை தொகுதிகளின் பெயர்கள் மாறும். வீ த லீடர்ஸ் அமைப்பின் அரசியல் எதிர்காலம் அனைத்தையும் மா்றறக்கூடிய முக்கிய சட்ட திருத்த மசோதாக இந்த 132-வது திருத்தம் ஆகும்.
2026-ல் கொண்டு வரப்படும் இந்த மசோதாவில் 2051 வரை வேறு எந்த மாற்றமும் இருக்காது. இதில் எதிர்ப்பதற்கு ஒன்றும் இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்னரே இந்த தொகுதி மறுவரையறை செய்யப்படுவது வரவேற்க்கத்தக்கது. தவெக அரசு இதை ஆதரிக்கும் என நம்புகிறேன்.
இதில், அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாமல், அடுத்த 25 ஆண்டுகளுக்குள் நம் அரசியலை தீர்மானிக்கக்கூடிய ஒரு காரணியாக இருப்பதால் இதில் அரசியல் படுத்தக்கூடாது என்பது எங்கள் விருப்பம்.
சுய பரிசோதனை செய்ய வேண்டும்:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வருக்கு யாரோ தவறான ஆலோசனைகளை கொடுக்கின்றனர் என முன்னரே நாங்கள் கூறியுள்ளோம். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியை உச்ச நீதிமன்றம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது என்பது அரிதான நிகழ்வாகும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பக்கம் முருக பக்தர்களுக்கு சரித்திர தீர்ப்பாக கிடைத்துள்ளது. மற்றொரு பக்கம் பார்த்தால், மாநில அரசு இவ்விவகாரத்தை சரியான முறையில் கையாளவில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் சரியான முறையில் கையாண்டிருந்தால் உச்ச நீதிமன்றம் ஒரு பகுதியை நேரடியாக கட்டுப்பாட்டுக்குள் எடுத்திருக்காது.
எனவே, தமிழக முதல்வர் விஜய் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்நிகழ்வுக்கு தவெக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தவெக சுய பரிசோதனை செய்வார்கள் என நம்புகிறோம்.
கூட்டணி மாற்றம்:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆட்சியரை இன்னும் சஸ்பெண்ட் செய்யாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. திருப்பரங்குன்றம் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பு அல்ல. வழிபாட்டு முறையை முருக பக்தர்களுக்கு கொடுத்திருக்கக் கூடிய ஒரு தீர்ப்பு.
முதல்வர் பேச வேண்டிய நேரம் இது. பாலியல் வழக்கில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார். இதில் முதல்வரின் கருத்து என்ன என தெரியாது.
திருப்பரங்குன்றம் விவகாரம், தொகுதி மறுவரையறையி்ல் முதல்வரின் கருத்து என்ன?
தொகுதி மறுவரையறை திமுக ஆதரித்துள்ளதால், இந்தியாவின் கூட்டணி வரைபடம் மாறியுள்ளது.
அடுத்த 6 மாதத்தில் நடக்கக் கூடாத கூட்டணி எல்லாம் தமிழகத்தில் நடக்கப் போகிறது. கூட்டணியின் அடிப்படை அம்சம் எல்லாம் தமிழ்நாட்டில், இந்தியாவில் மாறப் போகிறது. அப்படி இருந்தும் முதல்வர் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
இது தவறான முன்ணுதாரமாகிவிடும். என்ன நடந்தாலும், நாங்கள் பேச மாட்டோம், அறிக்கை தர மாட்டோம் என்றால் தமிழக மக்களுக்கு உங்கள் நிலைப்பாடு என்ன என்பது எப்படித் தெரியும்?
என்னைப் பொறுத்தவரை முதல்வர் நேரடியாகவோ, அறிக்கை மூலமாகவோ பேச வேண்டிய நேரம் வந்து விட்டது. திமுக - பாஜக கூட்டணி குறித்து கேட்கிறீர்கள். இது ஆரம்பம் மட்டுமல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கான அச்சாரமாகவும் நாங்கள் பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.